வெகு காலத்துக்குப் பிறகு, மழையெனப்
பெய்த மழையை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது
ஆனி மாதத்தின் இறுதி வாரத்தில்
மாலை நேரங்களில் பெய்தது பேய் மழை
நிற்காமல், நீண்ட நேரம், நினைத்து
நினைத்து மனம் திறந்தது வானம்.
என் நல்மனமும்.
அமைதி தவழ்ந்த அலுவலகத்தில்,
நீலநிற நியான் ஒளியில் நின்றிருந்தேன்,
கண்முன் நீண்ட கண்ணாடி சன்னல்கள்,
வெள்ளி முத்துச்சரங்களாய் மழைத்துளிகள்.
மனதினுள் ஈரம் படர்ந்து,
நினைத்தது நினைவுகளை,
மறந்த காலத்தை.
பின் சன்னலைத் திறந்தால்
மாமரங்களில் மழையோசை,
முகிழ்த்தது மனம்.
நீண்டு உயர்ந்த மலைகளின் அடிவாரத்தில்
மஞ்சளாறு பிறந்து, பாய்ந்த என் ஊரில்
மனதுக்கு இதமான மனிதர்கள் மத்தியில்
வாழ்ந்த அந் நாட்கள் மறந்தே விட்டன.
நகரத்தில் வந்து நானாகவே நிற்கிறேன்.
மாமரமும், மரப் பொந்தும்,
மண்வாசனையும், மழைநீரும்,
மருதமும், மாணவப் பருவமும்;
இன்று பெய்த மழையில் நிழலாடின.
காற்றின் கீதமும், தாகூரின் கவிதையும்,
காகிதப் படகுகளும், காதலியின் கண்களும்.
ஆம், அது கனாக்காலம்.
படரும் இருளிலும் பார்க்க முடிந்தது,
ஆங்காங்கு தங்கியிருந்த நீர்ப்படலங்களை.
இன்று பெய்த மழையில் ஏனோ நனைய விரும்பவில்லை,
நகரத்தில் மழை பெரும்பாலும் சலிப்பைத்தான் தருகிறது.
முன்னர் ஒரு நாள் மாலையில், கண்கவர்
கானகத்தில் கால் பதித்தபோது,
இதேபோல் இடியுடன் கூடிய மழை.
மலைகளின் மேலே முகில்களை முத்தமிட்ட தருணமது
மறைவதற்கு இடமுமில்லை, மனமும் இல்லையன்று,
பச்சைப் புல் படர்ந்த மலையில்,
நெஞ்சம் நிறைந்த நிலையில்
படுத்திருந்தோம்.
வரையாடு வானத்தை முகர்ந்து பார்த்தது;
கோணலாறு கண்ணாடி போல் பளபளத்தது.
வெளிர்நீல வானுக்கப்பால்,
வெளி விழித்துக் கொண்டிருந்தது.
மௌனத்தில் மயங்கிய நாங்கள்;
மோனத்தில் ஆழ்ந்திருந்தோம்.
நனைதலை விட சுகமொன்றுண்டோ?
மழையை விட அழகுமுண்டோ?
ஆனால், அது மறந்த காலம்.
நானோ நகரவாசி,
வாழ்வைத் தொலைத்து,
வாழ்க்கையைக் கடத்துபவன்.
மழை சற்றே ஓய்ந்திருந்தது, வீடு
நோக்கிய நெடும் பயணம் தொடங்கியது,
விஸ்தாரமான வீதிகளில்,
கலங்கிய குளங்களைத்
தாவி, தாவி நடந்தேன்.
மரத்தின் உயிரை வழித்துச்,
சொட்டிய அப்பனித் துளிகள்
நனைத்தன என்னிதயத்தை.
இன்றிரவு நான் பாடுவேன்,
என் தனிமையின் தாகத்தை,
பின்னிரவின் சோக கீதத்தை.
ஆம்.
இது,
மரித்தவற்றை
உயிர்ப்ப்பிக்கும்
மழைக்காலம்.
1 comment:
நல்ல கவிதை. சிறப்பான முயற்சி.
Post a Comment